சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
- கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.
சென்னை:
ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.
அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.