உள்ளூர் செய்திகள் (District)

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் மனு அளித்த காட்சி.

பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் மனு அளித்த ஆராய்ச்சி மாணவர்

Published On 2024-10-14 08:34 GMT   |   Update On 2024-10-14 09:13 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
  • மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

விழாவில் ஒவ்வொரு மாணவராக அழைத்து பட்டம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பட்டம் வாங்க வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர், கவர்னரிடம் இருந்து பட்டம் பெற்றதும், கவர்னரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவை கவர்னரும் பெற்றுக்கொண்டார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது பெயர் பிரகாஷ். விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமம். நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் (பிஎச்டி) பட்டம் பெற்றேன்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 2 விடுதிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அங்குள்ள கழிவறை ஒழுகுகிறது. மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விளையாட அனுமதிக்கிறார்கள். நாங்கள் வைவாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

சில பயிற்சியாளர்கள் ஆராய்ச்சி மாணவர்களை அவர்களது வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனக்கு இதனால் பிரச்சினை இல்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News