காரைக்காலில் சாலையில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது.
- வாகனங்களை திருப்பிவிட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. இத்தகைய பாலங்கள் வழியே கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றது. இவற்றில் பல சிறிய பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், சம்பந்த ப்பட்ட பாலங்களையும், பாலத்தை ஒட்டிய சாலைகளையும் சரி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கடந்த பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட பொதுப்பணித்துறை இந்த புகார் குறித்து, கண்டும் கானாமல் இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையை பாலஙக்ளை சரி செய்ய வலியுறுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையில், அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் வழியே போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. பொதுமக்கள் இறங்கி, வேறு வாகனங்களில் செல்லும் நிலை உருவானது. விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று, இடிந்த பாலத்தை ஆய்வு செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பாலம் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.