உள்ளூர் செய்திகள்

சேலத்தில் நகை கடை நடத்தி ரூ.100 கோடி மோசடி

Published On 2024-06-27 05:39 GMT   |   Update On 2024-06-27 05:39 GMT
  • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
  • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

சேலம்:

சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

Tags:    

Similar News