உள்ளூர் செய்திகள்

ஆர்.எஸ்.புரம் பன்னடுக்கு வாகன நிறுத்தகம்

Published On 2022-08-24 10:05 GMT   |   Update On 2022-08-24 10:05 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
  • கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கோவை :-

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்ட முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் ரூ.41.56 கோடி மதிப்பில், 4.50 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்தகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

டி.பி. சாலையில் தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய வகையில் 60 சென்ட் பரப்பளவில் வாகனம் நிறுத்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 373 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். தரைதளத்தில் மட்டும் 46 கார்களை நிறுத்த முடியும். மீதமுள்ள ஒன்று முதல் 4 தளங்களிலும் தலா 81 கார்களை நிறுத்த முடியும். கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களை தற்போது இங்கு நிறுத்த முடியாது. அதற்கான நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும். இந்த பன்னடுக்கு வாகனம் நிறுத்தகம் இன்று முதல் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் டி.பி. சாலை மற்றும் அதை ஒட்டிய சாலைகளில் விதிகளை மீறி நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படும்.

இந்த வாகன நிறுத்தகம் நவீன முறையில் கட்டப்பட்டு உள்ளது. மீதமுள்ள பரப்பில் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்றனர்.  

Tags:    

Similar News