சேலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 260 ஆக உயர்வு
- கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 147 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது . இதனால் சேலம், நாமக்கல் மாவட்ட கறிக்கோழி விற்பனை சில்லரை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையை விட குறைந்த அளவே பொதுமக்கள் இறைச்சி வாங்கி செல்கிறார்கள்.
இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலையால் அதிக அளவில் கறிக்கோழிகள் இறந்தன. இதனால் கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது. விரைவில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றனர்.
இதனிடையே 520 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சில்லரை கடைகளில் 650 காசுகளுக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.