இடங்கணசாலை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மறியல்
- குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
- தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காகாபாளையம்:
சேலம் இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.
ஒப்பந்த தொழிலாளர்
இந்த பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.
மறியல்
இந்த நிலையில், தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.