மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை சொத்து பிரித்து கொடுக்க மறுத்ததால் கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டப்பட்டாரா?
- ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
- அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
கொலை
கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொடூர கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மர்ம கும்பலை விரைந்து பிடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அத்தாயம்மாள் கணவர் ராமசாமி மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் மக்களிடம் இது கொலை பற்றி விசாரணை நடத்தினார்.
50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இந்த கொலை குறித்து துப்பு துலக்க மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொலையை யார் செய்தார்கள்? என இதுவரையிலும் தெரியாமல் உள்ளது. இதனால் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் ெகாலை, கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், காட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், ராமசாமிக்கு சொந்தமான ேதாட்டத்தில் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை நடந்த இடத்தில் அருகே உள்ள சாலைகளில் சென்று வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறு
இதனிடையே உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த கொலையில் அவர்க ளுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் இந்த கொலைக்கு கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சைபர்கிரைம் உதவியையும் தனிப்படை போலீசார் நாடி உள்ளனர். செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து சைபர் கிரைம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உளவுப்பிரிவு
மேலும் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.ஐ.சி.யூ, போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளை யடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.