100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
- கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
- ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், ஒரு குறிப்பிட்ட நபர்களின் அடையாள அட்டையில் மட்டும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீல் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அடையாள அட்டையில் சீல் வைக்கப்படாத பணியாளர்கள், தங்களுக்கும் ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.