ரெயில்வே தண்டவாளத்தில் பிரபல ரவுடியை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது
- ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
- கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சேலம்:
சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.