சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் விரைவில் நடைபெறுகிறது
- 2010-ம் ஆண்டு மே மாதம் 2 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.
- கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம்:
சேலத்தில் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 2 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.
பக்தர்கள், அரசியல் கட்சியினர் கட்டணத்தை கட்டி தேரை இழுத்து வருவார்கள். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் நடைபெற்றது. இதனால் கோவிலில் தங்க தேரோட்ட வீதி உலா மற்றும் திருவிழாக்கள் நடைபெறவில்லை.
கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இந்த பூஜைகள் வரும் 25-ந் தேதி முடிவடைகிறது. அதன்பின் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், மண்டல பூஜை நிறைவுக்கு பிறகு கோவிலில் வழக்கமான பூஜைகள், விழாக்கள் நடைபெறும் என்பதால், பக்தர்கள் கூட்ட நாட்களை தவிர்த்து தங்க தேரோட்ட வீதி உலாவுக்கு, கோவில் நிர்வாகத்தில் முன்னதாக ரூ.2000 கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.