குமரியில் குளமாக மாறிய உப்பளங்கள்- உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு
- உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, புத்தளம், கோவளம், மணக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களை போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குமரி மாவட்டத்தில் தொடர் மழை இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் புத்தளம், சாமி தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பளங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.