ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா
- சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
- மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர்.
ஏர்வாடி:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 850 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் இன்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை மே9-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது.
மே 18-ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது. மே 19-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடி யேற்றமும் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதா யத்தினரும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களி லிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூன் 7-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்ன தானம் வழங்கப்படும்.