செஞ்சி ஒன்றியத்தில் தயார் நிலையில் மணல் மூட்டைகள்
விழுப்புரம்:
புயல் அறிவிப்பு எதிரொலியாக செஞ்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் தாக்கம் எதிரொலியாக இன்று முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஏரி உள்ளிட்ட இடங்களில் ஏதாவது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்காக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதை செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மேற்பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் கிராமப் பகுதிகளில் முகாமிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.