உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விதிமீறல் பற்றி ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை

Published On 2023-02-16 01:52 GMT   |   Update On 2023-02-16 01:52 GMT
  • பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை :

தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.

புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News