- ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
- வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் ஒன்றியம் வைப்பூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் விஜயஸ்ரீ (வயது 13). இவர் வைப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே நடந்து வருகிறது. அதனால் விஜயஸ்ரீயை திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு விஜயஸ்ரீயை நேற்று அப்பள்ளிக்கு அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார்.
ஆனால் ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை கொடுத்து சேர்க்கை படிவத்தில் கையெழுத்துட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.
தனது விருப்பத்திற்கு மாறாக தோழிகளை பிரிந்து வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது என விஜயஸ்ரீ மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு திரும்பிய முத்துலட்சுமி மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி விஜயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தோழிகளை பிரிவதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.