உள்ளூர் செய்திகள்

சென்னை வேப்பேரியில் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்ட பள்ளி மாணவர்கள்

Published On 2024-07-24 05:54 GMT   |   Update On 2024-07-24 05:54 GMT
  • பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
  • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவொற்றியூர்:

சென்னையில் ரூட்டு தல தகராறில் கல்லூரி மாணவர்களிடைய பஸ், ரெயில்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் பஸ்களில் தொங்கிய படி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.

இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டரிடம் மோதலில் ஈடுபட்டு தாக்குல் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159ஏ) கும்பலாக ஏறினர். அவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

சில மாணவர்கள் பசின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை எச்சரித்தும் கேட்டகாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். பஸ் நடுரோட்டில் நின்றதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது.

இந்த பஸ் புரசைவாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து உள்ளனர். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.

புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

எனவே இந்த இருவேளைகளிலும் பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தங்களில் போலீசார் கண்காணிபில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News