பல்லாவரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு- வீடுகளுக்கு 'சீல்' வைப்பு
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
- ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தாம்பரம்:
சென்னை கன்டோன் மென்ட் பல்லாவரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றி, அரசு நிலத்தை மீட்க கலெக்டர் ராகுல்நாத் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து இன்று காலை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், வீடுகளை பூட்டி சீல் வைத்தனர்.
வீடுகளை பூட்டி சீல் வைப்பதற்கு முன்பு அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அங்குவசித்து வந்தவர்களுக்கு அனுமதி அளித்தனர். பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்டதும் அதிகாரிகள் உடனடியாக வீட்டினை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் முழுவதையும் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி ஆகும். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.