சென்னை சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 214 டாஸ்மாக் பார்கள் சீல் வைப்பு
- இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
- அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி சம்பந்தமாக கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகிறது.
இதை மீறி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
இது தொடர்பாக அடிக்கடி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகாரை தொடர்ந்து அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்து வருகின்றனர்.
இதுபோல் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி வட்டாரங்களில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் 95 பார்களும், செங்குன்றத் தில் 53 பார்களும், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 66 பார்கள் உள்பட முறை கேடாக செயல்பட்ட 214 பார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை பார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.