திண்டிவனத்தில் மழை நீரை அகற்றாததால் நாற்று நட்டு போராட்டம்
- மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ரொட்டிக்கார் தெருவில் கடந்த ஒரு மாதக் காலமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியான முறையில் மூடப்படாததால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும், சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி திண்டிவனம் நகராட்சியில் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி சாலையிலுள்ள பள்ளங்களிலும், சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளிலும் நாற்று நடவு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.