உடுமலையில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்
- தாராபுரம் சாலையில் ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
உடுமலை :
இயற்கை எழில் நிறைந்த மலையும் மலை சார்ந்த பகுதியை பின்னணியாக கொண்ட உடுமலை கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள கனிம வளங்களை நோட்டமிடும் மர்ம ஆசாமிகள் லாரிகளில் திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திச் செல்வதாக உடுமலை ஆர்.டி.ஓ வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாராபுரம் சாலையில் ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி விசாரணை மேற்கொண்டார். அதில் முறையான ஆவணங்கள் இன்றி மைவாடி பகுதியில் இருந்து கிராவல் மண் அள்ளிக் கொண்டு வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ லாரியை பறிமுதல் செய்து உடுமலை போலீசில் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து போலீசார் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.