உள்ளூர் செய்திகள்

நெல் மூட்டைகள் ஏற்றி வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

2-வது நாளாக நெல் கொள்முதல் செய்யாததால் செஞ்சி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2023-09-20 07:34 GMT   |   Update On 2023-09-20 07:34 GMT
  • நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர்.
  • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம்:

செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர். அதன்படி நேற்று 4,600 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து கமிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்கின்ற எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூட்டை மாற்ற மாட்டோம் என பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் நேற்று கொண்டு வரப்பட்ட 4600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும் இப்பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வரை தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நேற்று இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் எதிரில் வைக்கப்பட்டது. இதனை அறியாத விவசாயிகள் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூட்டைகளை விற்பனைக்கு இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் இதனை கண்டித்து நெல்மூட்டை கொண்டு வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் செஞ்சி - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் செஞ்சி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கேட்டை திறந்து நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து இன்று கொள்முதல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. இது போன்ற செயல்கள் மறைமுகமாக வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கும் செயலாக உள்ளதென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News