உள்ளூர் செய்திகள்

பழனியில் தேவஸ்தானத்தை கண்டித்து 13-ந் தேதி கடையடைப்பு போராட்டம்

Published On 2024-07-10 05:59 GMT   |   Update On 2024-07-10 05:59 GMT
  • விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
  • நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News