பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம்
- பொள்ளாச்சியிலும் நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் செய்து வந்தனர்.
- பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1971-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி 5 ஆண்டுக்கு ஒரு முறை மறுசீராய்வு செய்து வரி வசூல் செய்யப்படுகிறது.
அதன்படி பொள்ளாச்சியிலும் நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் செய்து வந்தனர். இந்த நிலையில் நகர பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டி உள்ளதாக தனி நபர் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு விதிகளை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்வதை நிறுத்தி விட்டு, விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து வந்தனர்.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து வணிகர் சங்கத்தினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பொள்ளாச்சியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் பொள்ளாச்சியில் உள்ள கடைவீதிகள் உள்பட அனைத்து முக்கிய வீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அங்குள்ள மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பொள்ளாச்சி கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொள்ளாச்சிக்கு வந்தவர்கள் அத்தியாவசிய தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே அனைத்து வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதையடுத்து அனைத்து வணிகர் சங்கத்தினர் அங்குள்ள திருமண மண்டபத்தில் ஒன்றிணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.