உள்ளூர் செய்திகள்

டவுன் கடைகளில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

நெல்லை டவுனில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

Published On 2023-06-09 09:30 GMT   |   Update On 2023-06-09 09:30 GMT
  • மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் பணியாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
  • 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

அதிரடி சோதனை

இதையடுத்து கமிஷனர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மேஸ்திரி சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மனோஜ், முத்துராஜ், மாரியப்பன், சேக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் டவுண் சத்தியமூர்த்தி தெரு, தெற்கு ரத வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர் இளங்கோ 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலப்பாளையம்

அதேபோல் மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலை செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன் , மரிய பாக்கியம், எல் சி எப் பணியாளர்கள் வேல்முருகன், முகமது சபி ஆகிய குழுவினர் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


 


மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

Tags:    

Similar News