மதுரை ரெயிலில் கொண்டுவரப்பட்ட 29 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்
- ரெயிலில் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்து இருந்தனர்.
- வணிகவரித்துறை அதிகாரிகள் அவரிகளிடம் நடத்திய விசாரணையில் உரிய பில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
மதுரை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை சோதனைகள் தீவிரமடைந்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரெயில் மூலமாக பணம் மற்றும் தங்கம், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதனை தடுக்கும் வகையில் ரெயில்வே காவல்துறையினரும் சந்தேகத்துக்குரிய வகையில் ரெயில் நிலையத்தில் நிற்பவர்கள், ரெயிலில் பயணம் செய்பவர்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லக்கூடிய பயணிகள் ரெயிலில் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்து இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்த போது தென்காசியை சேர்ந்த முருகன் மற்றும் சாகுல் ஹமீது என்பது தெரியவந்தது.
இருவரும் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 29.200 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த ரெயில்வே காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பொருளுக்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவர் மற்றும் வெள்ளி பொருட்களையும் மதுரை வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பொருட்களை பறிமுதல் செய்த வணிகவரித்துறை அதிகாரிகள் அவரிகளிடம் நடத்திய விசாரணையில் உரிய பில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுமார் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 928 அபராதம் வித்துள்ளனர். அபராத தொகையை செலுத்தியதை தொடர்ந்து பொருட்களை விடுவித்தனர்.