உள்ளூர் செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

Published On 2024-10-26 04:28 GMT   |   Update On 2024-10-26 04:28 GMT
  • சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் பார்த்த போது யானை நின்றிருந்தது.
  • ஒற்றை காட்டு யானை, தோட்டமூலா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதி உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

குறிப்பாக ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து, குடியிருப்புகளை சேதப்படுத்தி, பொருட்களை சேதப்படுத்துகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தோட்டமூலா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.


வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த யானை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த தென்னை மரத்தை வேரோடு பிடுங்கி சாய்த்தது.

சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் பார்த்த போது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர்கள் கதவை பூட்டி கொண்டு பாதுகாப்பாக இருந்தனர். மேலும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி சென்றது. தொடர்ந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், இந்த யானையை பிடித்து முதுமலை காப்பகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News