சீர்காழி நகர்மன்ற கூட்டம்; கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்- வெளிநடப்பு
- எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
- பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,
உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.
கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.
கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.
நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.
தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.
குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.