வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை
- வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை கட்டப்படுகிறது.
- விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டிக் குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக, வைகை ஆற்றின் குறுக்கே ரூ30.60 கோடி மதிப்பீட்டில் மதகு அணை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
இந்த அணைக்கட்டு மூலம் ஏற்கனவே கட்டிக் குளம் முகப்பில் உள்ள தலைமதகு வழியாக கட்டிக் குளம் கண்மாய்க்கும், வைகை ஆற்றின் வலது புறத்தில் புதிதாக தலைமதகு கட்டி மிளகனூர், முத்தனேந்தல் மற்றும் இதர கண்மாய்களுக்கு வலது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பகிர்ந்தளிக்க முடியும்.
மேலும் இந்த அணைக்கட்டின் மூலம் வைகை ஆற்றின் மிக குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கவும், இதன் மூலம் உபரிநீரை தேக்கவும் இயலும். வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை மிளகனூர் கண்மாய் வழியாக சின்னக் கண்ண னூர், எஸ்.கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டார் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய்கள் உள்பட 16 கண்மாய்களுக்கும் வெள்ள நீரை இந்த அணைக்கட்டு மூலம் வழங்க இயலும். இதனால் சுற்றியுள்ள 4269.00 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (சிவகங்கை) பாரதிதாசன், உதவி செயற்பொறி யாளர்கள் மோகன்குமார், முத்துப்பாண்டி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.