பிள்ளையார்பட்டியில் இன்று மாலை தேரோட்டம்
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.
- தீர்த்தவாரி- கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு மூலவராக விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
விழாவில் கடந்த 27-ந் தேதி கஜமுக சூரசம்காரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். முன்னதாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகர் வீதி உலா வருகிறார். சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வருகிறார். இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன் பின் விநாயகர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த தேரோட்டம் இந்த ஆண்டு இன்று மாலை நடை பெறுவதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மூலவரான கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கும் அதன்படி. நாளை சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (30-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு கற்பக விநாயகர் காட்சியளிப்பார். இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தியான நாளை காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.