உள்ளூர் செய்திகள் (District)

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு முறை குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை சிவகங்கை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தொடங்கி வைத்தார். 

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Published On 2022-06-13 08:04 GMT   |   Update On 2022-06-13 08:04 GMT
  • சிவகங்கையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
  • பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

சிவகங்கை

சிவகங்கை ராணி ரங்கநாச்சியார் பஸ் நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்பதனை உறுதி செய்திடவும், அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை தொழிலாளர் துறையின் மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் அமர்த்துவதை தடுத்து அவர்கள் கல்வி கற்றிடவும், 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் அபாயகரமான செங்கல்சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற தொழில்களில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு குழுவினர்கள் தொடர்கள ஆய்வு மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு கல்வி கற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 25 கடை, நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை வருமானம் தேடித்தரும் எந்திரமாக கருதாமல் அவர்களின் எதிர்கால நலன், பாதுகாப்பு, சுதந்திரம், தனித்திறன் போன்றவற்றிற்கு மதிப்பளித்து, அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், தொழிலாளர் நல அலுவலர் ராஜ்கு மார், நகர்மன்றத் துணை த்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், சரவணன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News