தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பாற்றிய தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பாராட்டத்தக்க வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த, தலை சிறந்த தொழில் மற்றும் வணிக நிறுவனத்திற்கு, விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என சட்ட சபையில் 2022-23-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட–ப்பட்டது.
அனைத்து தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவை பொதுத்துறை, தனியார், கூட்டுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் இந்த விருது பெற தகுதி உடையவை ஆகும். இந்த நிறுவனங்கள், பங்கு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.
தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளும் இந்த விருதுக்கு பெறத் தகுதி உடையவை ஆகும். மேற்கண்ட நிறுவனங்கள் நேரடியாகவோ, அறக்கட்டளைகள் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ, இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.
தனித்துவமாக அறக்கட்டளைகள், தொண்டு நிறுவ–னங்கள் மற்றும் மன்றங்கள்,சங்கங்கள் இந்த விருது பெறத் தகுதியற்றவை ஆகும். ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்க எடுத்துக் கொள்ளப்படும்.
விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.
மேலும் பல்வேறு சமூகநல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதியு டைய நிறுவனங்கள் அரசின் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.