- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- மாணவர்கள் சமூக பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என விழாவில் துணை வேந்தர் அறிவுறுத்தினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஆ.பா.செல்வராசன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெ.குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கூறும் வகையில், இந்தியா அனைத்து வளங்களையும் பெற்ற நாடு.நாம் அனைவரும் இந்தியர் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் தடுப்பூசிகளை தயாரித்து நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டு மக்களுக்கும் வழங்கி உதவிய நாடு இந்தியா ஆகும். தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்கினை நிர்ணயம் செய்து பயணிக்க வேண்டும். பிறருக்கு உதவி புரியும் அளவிற்கு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்றலை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களின் சமூக பொறுப்பு உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
உங்களை நீங்கள் நம்பும் போது தான் உலகம் உங்களை நம்பும். எந்த செயலையும் நம்பிக்கையோடும், துணிச்சலோடும், நேர்மை யோடும் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இளங்கலை மாணவர்கள் 957 பேரும், முதுகலை மாணவர்கள் 164 பேரும் என மொத்தம் 1,121 பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.