மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
- மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
- மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.
வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.