உள்ளூர் செய்திகள்
- திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.
பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.