உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Published On 2023-02-08 07:44 GMT   |   Update On 2023-02-08 08:50 GMT
  • சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
  • மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிபடிக்கும் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மேல்நிலை கல்வி படிப்பது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்து ரைக்க ப்படும் கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்கி தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேசுவரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News