செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு
- செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
- சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.