தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை
- தேசிய கபடி போட்டியில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
- லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.
மானாமதுரை
கோவாவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய கபடி போட்டி நடந்தது. யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்த இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் ராமநாத புரத்தை சேர்ந்த பயிற்சியாளர் புவனேஸ்வரன் தலைமையில் மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியின் இறுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்த அணியில் பங்கேற்ற மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் இருவருக்கும் தங்கப்பதக்கங்களும் தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப்பின் பெட்ஷி, மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.