உள்ளூர் செய்திகள்

கண்ணங்குடி யூனியன் கூட்டம் நடந்தது.

வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய தீர்மானம்

Published On 2022-09-28 08:19 GMT   |   Update On 2022-09-28 08:19 GMT
  • கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
  • பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.

கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News