வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு
- வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
- வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை
வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்திசிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, அதே வளாகத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இந்த வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொ ணரவும், தமிழ் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது.
இதுபோன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களை கவுரவிக்கும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், முதல்-அமைச்சர் சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக் கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.