அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து தவிக்கும் இலங்கை அகதிகள்
- அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து இலங்கை அகதிகள் தவிக்கிறார்கள்.
- கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக 186 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அங்கு வந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள வீட்டை இடித்து விட்டு சிறிது காலம் வெளியே தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதிய வீடு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறிய உறுதிமொழியால் முகாமில் இருந்த 52 குடும்பங்களை ேசர்ந்தவர்கள்புதிய வீடு கட்டுவதற்கு தங்கள் வீட்டை இடித்தனர். இதன் காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் அதிகாரிகள் கூறியபடி தற்போது வரை வீடுகள் கட்டி தரப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் உரிய பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அகதிகள் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் அதிகாரிகள் கூறியபடி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் உடனே வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.