பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
- தேவகோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
- ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. தேவகோட்டை நகர் மற்றும் கிராமங்களை சுற்றியுள்ள மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேவகோட்டை-காரைக்குடி சாலையில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.
பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருந்தால் மட்டுமே ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க முடியும் என போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் காலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.