அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- திருப்பத்தூரில் அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வட்டார வள கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அழகுமணி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் முத்துமாரியம்மன், 30 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பழைய ஓய்வுதத் திட்டம், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கும் திட்டம், தேசிய வழி கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.