பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி-கருத்தரங்கு
- பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி-கருத்தரங்கு நடந்தது.
- ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு தேவைக்கு என இளைஞர்களுக்கான வேலை அளிக்கும் வகையில் வேளாண்மை தொழில் முனைேவார்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.84.30 லட்சம் மதிப்பீட்டில் 6101 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி , தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வழங்கினர்.
இதில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா), வேளாண்மை துணை இயக்குநர்கள் சுருளிமலை, பன்னீர்செல்வம், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.