அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை: தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்ந்து வருகிறது
- ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கந்தம்பாளையம் பகுதியில் அரசு ஊராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 65 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுடன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் வகுப்புகளை கற்பதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.
இந்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட ஒரு படி உயர்ந்து தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதலாக ஆங்கிலத்தில் தங்களது பேச்சு, எழுத்து திறன்களை மேம்படுத்தி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதனை கண்ட இடங்களில் தூக்கி வீசாமல் அதனை சேமித்து வைத்து பள்ளியில் ஒப்படைத்து வருகிறார்கள்.
அந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் வரும் நிதியை கொண்டு பள்ளிக்கு பின்பு சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதில் செடிகளை வைத்து மாணவர்களே பராமரித்து வருவதாகவும் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளை பள்ளி சத்து ணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக உதவி கரம் பெற்று ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை ஆங்கில வழியில் உயர்த்துவதுடன் மாணவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடவும் அவர்கள் வரும் காலங்களில் மேல் படிப்பிற்கு உதவுவ தாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.