மணிமுத்தாறில் சேதமடைந்து காணப்படும் சாலையை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- மணிமுத்தாறு பகுதியில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
- சேதமடைந்த சாலையால் பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 பட்டாலியன் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாலியன் போலீசார் பயிற்சி பெறும் பள்ளி உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், பேரூராட்சி அலுவலகமும் உள்ளது.
மேலும் மணிமுத்தாறு பகுதியில் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி மற்றும் அணை உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் மணிமுத்தாறில் இருந்து பாபநாசம், அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த சேதமடைந்த சாலையை பயன்படுத்தி வரும் பட்டாலியன் போலீசார், சுற்றுலா பயணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலை ஓரங்களில் உள்ள ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் இந்த சாலை மேலும் சேதமடைந்து வருகிறது.
இந்த சாலையால் ஏராளமான பட்டாலியன் போலீசார், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.மேலும் இந்த சாலையில் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த சாலையை அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.