விழுப்புரத்தில் பிளாஸ்டிக் பை, கவர்கள் விற்ற 2 கடைகாரர்களுக்கு அபராதம்
- விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.
- வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பைகள், கவர்களுக்கு தடைவிதித்தது. விழுப்புரம் நகராட்சி சார்பில் நகர சபைத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள் பை என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தும் வண்ணம் மஞ்சள் துணிப்பையும் பொதுமக்களுக்கு அடிக்கடி இலவசமாக வழங்கி விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள் இதனை மீறியும் ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள், காய்கறி கடைகள் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பை, கவர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு மூல காரணமாக செயல்படும் மொத்த பிளாஸ்டிக் கைப்பை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்தர் ஷா உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனகுமார் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த உரிமையாளர் ஹரிதாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதுவை சாலை உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக தெரியவந்தது. வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் செயல்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இரு கடைகளிலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பை, கவர்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் ஆகும்.