தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
தேனி:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டது.
மேலும் இச்சிறப்பு முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இம்முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது, 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 214 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, டாக்டர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உள்பட பலர் பங்கேற்றனர்.