உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மாணவ- மாணவிகளுக்கு புத்தகக் கையேடு வழங்கினார். 

தஞ்சாவூர் "சி " அகாடமியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் -2023 பயிற்சி வகுப்பு

Published On 2023-04-06 09:32 GMT   |   Update On 2023-04-06 09:32 GMT
  • “சி “ அகாடமியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலை காவிரி நகர் விரிவாக்கம், பி.கே.ஆர்கேடு காம்ப்ளக்சில் '' சி" அகாடமி செயல்பட்டு வருகிறது.

இந்த "சி " அகாடமியில் இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் - 2023 பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

"சி" அகாடமி முதன்மை அலுவலர் காயத்ரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் -2023 பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சிக்கு தேவையான புத்தகக் கையேடு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ பருவம் மிகவும் மகிழ்ச்சியான பருவம். கவலைகள் இல்லாத பருவம். சவால்கள் சில இருந்தாலும் அதையும் தாண்டி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை மாணவர் பருவத்தில் கிடைக்கும்.

வரக்கூடிய நீட் தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து மருத்துவராக வேண்டும்.

தலைசிறந்த மனிதநேயமிக்க மருத்துவராக திகழ வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியின் படித்தால் வெற்றி நிச்சயம். முதலில் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

தேர்வுக்கு இன்னும் 30 நாட்கள் தான் உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியம்.

நேரத்தை வீணாக்காமல் படிக்க வேண்டும்.

செல்போன் , டி.வி. பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் அனைவரையும் நான் மருத்துவராக தான் பார்க்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.

படிக்கும்போது மன அழுத்தம் தேவையில்லை.

மனதை ஒருமுகப்படுத்தி நன்றாக படியுங்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தாசில்தார் சக்திவேல் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து "சி " அகாடமி நிறுவன இயக்குனர் ஸ்ரீராமுலு பேசும்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மையத்தில் படித்த மூன்று பேர் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.

2021-ம் ஆண்டு 5 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு கலெக்டர் பேசிய தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தேர்ச்சி வீதம் அதிகரித்து 23 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு கலெக்டர் பேசிய ஊக்க வார்த்தைகளால் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இதைவிட அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் பேசிய கலெக்டருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கும் நன்றிகள். அனைவரும் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News