உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க சிறப்பு சுற்றுலா பஸ்

Published On 2024-10-16 05:15 GMT   |   Update On 2024-10-16 05:29 GMT
  • வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
  • இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டெல்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு சுற்றுலா பஸ் சேவையை திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், திருப்பனந்தாள் காசி திருமடம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இந்த சிறப்பு சுற்றுலா பஸ்சானது கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் சிங்காரவேலர் கோவில், பொரவச்சேரி கந்தசாமி கோவில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் (நாகப்பட்டிணம் மாவட்டம்), சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகிய 6 கோவில்களையும் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இயக்கப்படுகிறது.

இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சானது பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்சில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக பஸ்சில் பயணச்சீட்டு பெற்று க்கொண்டு பயணிக்க இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News